தமிழ்நாட்டில் அரிசி, காய்கறி, எண்ணெய் விலை வேகமாக உயர்கிறதா? கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"இரண்டு மாதங்களுக்கு முன், 1,700 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை (25 கிலோ) அரிசியின் விலை தற்போது 2,000 ரூபாயைக் கடந்துவிட்டது. இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என மொத்த வியாபாரிகள்" கூறுவதாகத் தெரிவிக்கிறார் கள்ளக்குறிச்சியில் மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ்.
"தமிழ்நாட்டில் எள் உற்பத்தி குறைந்ததால் நல்லெண்ணெய் விலை ரூ.30 வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இது மேலும் மோசமாகலாம்," என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரியான கணபதி.
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, அரிசி, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 35% வரை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் எல் நினோ விளைவால் சூழ்நிலை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கும் விவசாயிகள் மற்றும் வணிகர் அமைப்புகள் அதைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமெனக் கோரி வருகின்றனர்.
பொது மக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் என்ன? விலைவாசி உயர்ந்துள்ளதா?
அரிசி விலை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் கடந்த 15 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது கூற்றின்படி, கடந்த 6 மாதங்களாகவே விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
"மே மாதத்தில் ஒரு மூட்டை (25 கிலோ) அரிசி ரூ.1,400-க்கு விற்றது. அது ஜூலை மாத இறுதியில் ரூ.1,700 ஆனது. தற்போது 2,000 ரூபாயை கடந்துவிட்டது அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சர்க்கரை விலையும் ரூ.75ஐ தொட்டுவிட்டது," என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரிசி விலை உயர்வுக்கு செயற்கையாகப் பற்றாக்குறை உருவாக்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளதாகக் கூறுகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த ஆண்டு மிகுதியான நெல் உற்பத்தி இருந்தது. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல், அரிசியாக உற்பத்தி செய்யப்படாமல் வீணானதுதான் இப்போதைய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்குக் காரணம். அதோடு உணவுப் பொருட்களின் பதுக்கலும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் பதுக்கலைக் கவனிக்க வேண்டும். இதனால் இடைத்தரகர்கள் மட்டுமே பயனடைகின்றனர். அரிசி பதுக்கலை அரசால்தான் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு செய்தால் தற்காலிகமாக விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியும்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Facebook/PR Pandian
கடந்த ஆண்டின் தாக்கத்தையே தற்போது எதிர்கொள்வதாகக் கூறிய அவர் எல் நினோ பாதிப்புகள் இந்த ஆண்டின் இறுதியில்தான் தெரிய வரும் என்றார். அவரது கூற்றுப்படி, அண்டை மாநிலங்களில் நெல் உற்பத்தி குறைந்ததும் அரிசி விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம்.
"எல் நினோ பாதிப்பால் இந்த ஆண்டு மழை பெய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் நெல் உற்பத்தி பாதித்துள்ளது. இதன் உண்மையான தாக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிய வரும். கிராமப் பகுதிகளில் மக்களின் வாங்கும் திறனும் நுகர்வும் கணிசமாகக் குறைந்துள்ளது," என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "உரத்தின் விலை தற்போதும் சீரற்று உள்ளது. ஆனால் அதற்கான தட்டுப்பாடு வரவில்லை. ஏனெனில் தண்ணீர் பற்றாக்குறையால் இந்த ஆண்டு நெல் பயிரிடுவதும் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை" என்றார்.
எண்ணெய் விலை நிலவரம் என்ன?
சூரிய காந்தி எண்ணெய், பனை எண்ணெய் (பாமாயில்) போன்றவற்றின் விலை சற்று சீரடைந்துள்ளதாகக் கூறும் திருப்பூரைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரியான கணபதி, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற ரகங்களின் விலை சற்று உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் எள் உற்பத்தி குறைவாகவே உள்ளது. உள்ளூர் உற்பத்தி சில்லரை எண்ணெய் வணிகர்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். மொத்த வணிகத்தில் ஈடுபடுவோர் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சார்ந்தே இருப்பார்கள். இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும் உற்பத்தி இல்லை, வெளி மாநிலங்களிலும் உற்பத்தி சரிந்துள்ளது."
"சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை சற்று சீரடைந்துள்ளது. ஆனால் விதை எண்ணெய்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக" தெரிவித்தார் அவர்.
'காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது'
இந்த நிலையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து ஆகிய இரண்டும் குறைந்ததும் இதற்கு ஒரு காரணம். அரசு நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காய விற்பனைக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் இது முழுமையாகப் பலனளிக்கவில்லை. சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்களின் தேவைகளை அதன் மூலம் பூர்த்தி செய்துவிட முடியாது" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Facebook/AMVikramaraja
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
"சமீபத்திய விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் உற்பத்தி குறைந்து வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் அதிகமாக இறக்குமதியைச் சார்ந்துதான் இருக்கிறது. தமிழ்நாடு தன்னிறைவை நோக்கி நகர வேண்டும். அரசு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும்," என்கிறார் விக்ரமராஜா.
விவசாயிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கூறும் பி.ஆர்.பாண்டியன், "தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரணம், வறட்சி மாவட்டம் தொடர்பான அறிவிப்புக்கு குழு அமைப்பதாக சட்டப் பேரவையில் அறிவித்திருந்தது. அதை இன்னும் தொடங்கவில்லை. அந்தப் பணிகளை விரைந்து மேற்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































