காணொளி: 4 அடி அகலமே கொண்ட வீட்டில் நான்கு தலைமுறைகளாக வசிக்கும் குடும்பம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: 4 அடி அகலமே கொண்ட வீட்டில் நான்கு தலைமுறைகளாக வசிக்கும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

இரு கைகளையும் விரித்தால் எதிரெதிர் சுவர்களைத் தொட்டுவிடும் அளவுக்குக் குறுகலான வீடு இது. சூரத்தை சேர்ந்த ‘செய்லர் (sailor)’ குடும்பத்தினருக்கு சொந்தமான இந்த வீடு, நான்கு அடி அகலமும் 85 அடி நீளமும் கொண்டது.

நான்கு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் செய்லர் குடும்பத்தினர், இதே வீட்டில் அனைத்து குடும்ப விசேஷங்களையும் நடத்தியுள்ளனர்.

"இந்த வீடு சுமார் 75, 80 ஆண்டுகள் பழமையானது. எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறது. என் முன்னோர்கள், அதாவது என் தாத்தாவின் தாத்தா காலத்தில் இருந்தே கணக்கிட்டால், நாங்கள் 4வது தலைமுறை. வீட்டின் உட்புறம் நான்கு அடி அகலமும் 85 அடி நீளமும் கொண்டது. வெளிப்புறத்தில் வீட்டின் அளவு 5 அடி 3 அங்குலமாக உள்ளது.

எங்கள் வீட்டின் அகலம் ஏறக்குறைய இரு கைகளின் நீளத்திற்குச் சமமாக இருக்கும். சற்று உள்ளே சென்றால் வரவேற்பறையை அடையலாம், முதல் தளத்தில் உள்ள அறை அலுவலகமாகவும் படுக்கையறையாகவும் பயன்படுகிறது." என்று தற்போது அந்த வீட்டில் வசிக்கும் ஜகதீஷ் செய்லர் கூறினார்.

"ஒரு பங்களாவை விடவும் இந்த இடம் எங்களுக்கு மிக வசதியாகவும் அமைதியாகவும் தோன்றுகிறது." என்று அவரது மனைவியான பாமினி செய்லர் தெரிவித்தார்.

அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை சுட்டிக்காட்டி "ஃபிரிட்ஜை எப்படி உள்ளே கொண்டு வந்தீர்கள்?" என்று பிபிசி செய்தியாளர் கேட்டதற்கு, "மாவு அரைக்கும் இயந்திரம் அளவில் சிறிது என்பதால் எளிதாக வந்துவிட்டது. ஃபிரிட்ஜை கொண்டு வரத்தான் கதவைக் கழற்ற வேண்டியிருந்தது. கதவைக் கழற்றி வைத்துவிட்டு, ஃபிரிட்ஜை உள்ளே கொண்டு வந்தோம்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது, ஒரே நேரத்தில் இங்கு ஐந்து பேர் அமர்ந்து சாப்பிடலாம். ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் சாப்பிட்டு முடித்ததும், அடுத்த குடும்பத்தினர் சாப்பிடுவார்கள். இப்படித்தான் அனுசரித்துச் செல்கிறோம். இந்த வீட்டிலேயே எல்லா விசேஷங்களையும் கொண்டாடி இருக்கிறோம். எங்கள் குடும்பத்தின் அனைத்து திருமணங்களும் இங்கேயேதான் நடந்தன." என்று கூறினார்.

அங்கு சமையலறையை காட்டிய ஜகதீஷ் செய்லர், "இது முழு சமையலறைப் பகுதி. சமையலறை மேடையின் அகலம் நான்கு அடி. அதற்கு அருகே ஒரு சிங்க், பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்ட் உள்ளன. இது ஆடைகள் மற்றும் பெரிய பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான இடம். அதை தாண்டி குளியலறை மற்றும் கழிப்பறை உள்ளன. இரண்டாவது தளத்தில் இருந்து தபதி ஆற்றை நேரடியாகப் பார்க்கலாம். அம்பா மாதா கோவிலும் தெரியும்." என்று குறிப்பிட்டார்.

இவ்வளவு குறுகலான வீட்டில் அவர்கள் வசிப்பது எப்படி? விரிவாக காணொளியில்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு