காணொளி: தெற்கு சூடானில் பட்டினியால் மக்கள் இலைகளை உண்ணும் துயரம்
தெற்கு சூடானின் கொந்தளிப்பான ஜோங்லி மாகாணத்தில், அணுகக் கடினமான அகோபா என்ற பகுதியில் நயாச்சுடியர் வசிக்கிறார். மார்ச் மாதம், இரு ஆயுதக் குழுக்கள் அரசுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி, பரந்த அளவிலான பகுதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தன. இப்போது ஓரளவு அமைதி திரும்பியுள்ள நிலையில், பலர் மீண்டும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும், தங்கள் வாழ்வாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
"நாங்கள் புற்கள், இலைகளை நம்பியுள்ளோம். சில நேரம் நான்கு நாட்கள் வரை சாப்பிட ஏதுமின்றி இருக்க நேரிடும். பாலூட்டும்போது, போதுமான பால் சுரக்காததால் அவன் கதறி அழுகிறான். யோசித்துப் பாருங்கள், நான் பாலூட்டும் தாயாக இருந்தும், பல நாட்களாக சாப்பிடாமல் இருக்கையில் வேறு எப்படி இருப்பேன்" என்று கூறுகிறார் நயாச்சுடியர்.
தெற்கு சூடானில் 20 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் உள்பட 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுகிறது. பல்லாண்டுகளாக நீடிக்கும் மோதல்களையும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. உதவிகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பல சமூகங்கள் அவசரத் தேவைகளுடன் காத்திருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



