'மாட்டிறைச்சி சாப்பிடுவியா?': கோவையில் பிளஸ்-1 மாணவருக்கு பள்ளியில் என்ன நடந்தது? வழக்கின் பின்னணி

மாட்டிறைச்சி சர்ச்சை: கோவை பிளஸ் 1 மாணவர் இறப்பு விவகாரத்தின் பின்னணியில் என்ன நடந்தது?
படக்குறிப்பு, மாட்டிறைச்சி சர்ச்சை: கோவை பிளஸ் 1 மாணவர் இறப்பு விவகாரத்தின் பின்னணியில் என்ன நடந்தது?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை தொடர்பான விவரங்கள் உள்ளன.

கோவையில் பிளஸ் 1 மாணவர் அகிலன் வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

"வகுப்பறையில், 'மாட்டிறைச்சி சாப்பிடுவியா?' என ஆசிரியர் கேட்டுள்ளார். என் மகன் 'ஆமாம்' எனக் கூறியதை வைத்தே சக மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர்" எனக் கூறுகிறார், மாணவரின் தந்தை. "காவல்துறையின் விசாரணைப் போக்கு சரியானதாக இல்லை" எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் மறுத்துள்ளார். இதுவரை நடந்துள்ள விவகாரங்கள் குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மாணவர் மரணம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்தி வருவதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கோவை பீளமேட்டில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 பயின்ற அகிலன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை (அக்டோபர் 21) காலை சுமார் 8 மணியளவில் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மகன் புறப்பட்டுச் சென்றதாகவும், மதியம் சுமார் 1 மணியளவில் தான் சாப்பிட வீட்டுக்கு திரும்பிய போது தனது மகன் அசைவற்ற நிலையில் இருந்ததாகவும் பீளமேடு காவல்நிலையத்தில் மாணவரின் தாய் கௌசல்யா புகார் அளித்துள்ளார்.

பிறகு 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தபோது அவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு இறந்துவிட்டதாகக் கூறியதாகப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

'சாதி பெயரைச் சொல்லி திட்டி அடித்தனர்'

மாணவரின் தந்தை அசோக்குமார்.
படக்குறிப்பு, மாணவரின் தந்தை அசோக்குமார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்காக, 'யாரெல்லாம் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள்?' என ஆசிரியர் கேட்டுள்ளார். அப்போது என் மகன் தனது பெயரை கொடுத்துள்ளார்'. 'இதன்பிறகு, 'யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்?' என ஆசிரியர் கேட்ட போது, என் மகனுடன் சேர்த்து நான்கு பேர் எழுந்துள்ளனர். அப்போது இருந்தே சக மாணவர்கள் 2 பேர் என் மகனின் சாதிப் பெயரைச் சொல்லி துன்புறுத்தி வந்துள்ளனர்' என கௌசல்யா அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதுபற்றி முறையிட்டும் சக மாணவர்களை ஆசிரியர் கண்டிக்காததால், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என என் மகன் கூறினான். இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கூறியபோது, இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகக் கூறினர்" என்கிறார் மாணவரின் தந்தை அசோக்குமார்.

"அதன்பிறகு என் மகனை துன்புறுத்திய மாணவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை" என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

"ஆயுத பூஜை விடுமுறை முடிந்த மறுநாள் (புதன்கிழமை) பள்ளி திறக்கப்பட்டது. இறந்துபோகும் அளவுக்கு அவனுக்கு என்ன மனஉளைச்சல் ஏற்பட்டது எனத் தெரியவில்லை" என்கிறார் அசோக்குமார்.

4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

வகுப்பறையில் வேறு சில சிக்கல்களையும் தனது மகன் எதிர்கொண்டு வந்ததாக, காவல்துறையில் அளித்துள்ள புகாரில் தாயார் தெரிவித்துள்ளார்.

'மகனின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதால் மேற்படி நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகனின் மரணத்துக்கு சாதிய பிரச்னையே காரணமாக இருப்பதை அறிகிறேன்' எனப் புகார் குறிப்பிட்டுள்ள மாணவரின் தாயார், தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பீளமேடு காவல்துறை, தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகியோர் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டப் பிரிவு உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

முதல் தகவல் அறிக்கை மற்றும் தாய் அளித்த புகார் மனுவை பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட சிறப்பு நீதிபதிக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

'சாதியால் இன்னொரு மரணம் நேர்ந்துவிடக் கூடாது'

மாணவர் மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பீளமேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
படக்குறிப்பு, மாணவர் மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பீளமேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

மாணவர் மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பீளமேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஆனால், கைது நடவடிக்கையை தாமதப்படுத்துவதாக மாணவரின் தந்தை குற்றம் சுமத்தினார். "பள்ளி, கல்லூரிகளில் சாதி காரணமாக என் மகனைப் போல இன்னொருவர் இறந்துவிடக் கூடாது. என் மகனின் இறப்புக்கு நியாயம் வேண்டும். எனக்கு வேறு எந்தக் கோரிக்கைகளும் இல்லை" என்கிறார்.

தற்போது வரை மாணவரின் உடலை அவரது பெற்றோர் பெற மறுத்துப் போராடி வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

காவல்துறை கூறியது என்ன?

இந்த வழக்கு குறித்து கோவை மாநகர வடக்குக் காவல் துணை ஆணையர் தங்கதுரை விளக்கம் அளித்துள்ளார். "உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள விவகாரங்கள் குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.

மாணவர் மரணம் தொடர்பாக ஆசிரியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் இதர மாணவர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு மாணவர்கள், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், வெள்ளிக்கிழமையன்று சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மாணவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலில் இருந்து பிரதான வாயில் வரை பேரணியாக சென்று ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மாணவர் இறப்பு விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் விமர்சனம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
படக்குறிப்பு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர் இறப்பு விவகாரம் அரசியல்ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவரின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தலைமை ஆசிரியரிடம் இப்பிரச்னை குறித்து தெரிவித்த பிறகு தீண்டாமை குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன் என்பதை கடுமையாக விசாரிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

'சம்பந்தப்பட்ட பள்ளியில் கடந்த காலங்களில் சாதிய பாகுபாடும் வன்கொடுமைகளும் நடந்துள்ளதா என்பது குறித்து சுயாதீனக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' எனவும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை பதில்

மாணவர் உயிரிழந்தது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக பதில் கிடைத்தது. அத்துடன், "மாணவர் இறந்தது தொடர்பாக இரண்டு ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துவிட்டது. பள்ளியில் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தரப்பில் பதில் தரப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ்

வழக்கு தொடர்பாக பீளமேடு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், 'பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த மாணவருடன் மற்ற மாணவர்கள் பேசுவதில்லை என்றும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரிடம், மாட்டிறைச்சி சாப்பிடுகிறாரா எனக் கேட்டுள்ளதாகவும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தாய் அளித்த புகாரின்பேரில் அதே பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டியுள்ள ஆணையம், 'இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு