'8 மண்டை ஓடு கோபுரங்கள்' - வங்காளத்தை கைப்பற்ற 75 ஆண்டுகள் போரிட்ட 4 முகலாய பேரரசர்கள்

வங்காளத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற முகலாயப் பேரரசர்கள் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது.
படக்குறிப்பு, வங்காளத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற முகலாயப் பேரரசர்கள் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது.
    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, செய்தியாளர்& ஆராய்ச்சியாளர், லாகூர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

முகலாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு பெரும் படையுடன் வங்காளத்துக்குள் நுழைந்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றிவிடவில்லை.

வரலாற்று ஆய்வாளர் ரிச்சர்ட் ஈட்டன் தனது 'தி ரைஸ் ஆஃப் இஸ்லாம் அண்ட் தி பெங்கால் ஃப்ரண்டியர் 1204-1760' என்ற நூலில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிராந்தியத்தின் அப்போதைய தலைநகரான டாண்டாவுக்குள் 1574-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பேரரசின் படை நுழைந்தது முக்கியத் திருப்புமுனையாக அமைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால், இன்றைய வங்கதேசம் மட்டுமின்றி இந்தியாவின் மேற்கு வங்கம், பிகார், ஒடிசாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தப் பிராந்தியத்தைக் கைப்பற்ற முகலாயர்களுக்கு சுமார் 75 ஆண்டுகள் (1537 முதல் 1612 வரை) ஆனது. இந்தக் காலகட்டத்தில் நான்கு ஆட்சியாளர்களின் ஆட்சி நடைபெற்றது.

இந்தக் காலத்தின் நடுப்பகுதி 'ஆப்கன் காலம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், வட இந்தியாவில் இருந்து வந்த ஆப்கன் வம்ச ஆட்சியாளர்கள் இப்பகுதியின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

1526-ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஜஹீருத்தீன் முகமது பாபர், இந்தியாவில் ஆட்சி செய்த ஆப்கன் லோடி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரைத் தோற்கடித்து முகலாயப் பேரரசை நிறுவினார். இதற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆப்கன்கள் பிகார் மற்றும் வங்காளத்துக்கு வந்து, போர்ப் பிரபுக்களாக அங்கு குடியேறினர்.

'முகல் ரிலேஷன்ஸ் வித் தி இந்தியன் ரூலிங் எலைட்' என்ற தனது நூலில் இக்திதார் ஹுசைன் சித்திக்கி குறிப்பிடுவதன்படி, வங்காள சுல்தான் நசிருத்தீன் நஸ்ரத் ஷா (1519–1532), பிகாரில் ஆப்கன்களின் செல்வாக்கை ஊக்குவித்தார். வங்காளத்துக்கும் முகலாயப் பேரரசுக்கும் இடையே அது ஒரு தடுப்பு அரணாக இருக்கும் என்று அவர் நம்பினார்.

ஆனால், அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மஹ்மூத் ஷா (1532–1538), பிகாரில் கிளர்ச்சி செய்த தனது ஆளுநர் ஒருவருக்கு எதிராக 1533-ஆம் ஆண்டு படையை அனுப்பினார். அந்த ஆளுநர், ஆப்கன் தலைவர் ஷேர் கான் சூரின் கூட்டாளியாக இருந்தார்.

இதற்குப் பதிலடியாக, ஷேர் கான் 1535-ஆம் ஆண்டு வங்காளத்தின் தலைநகரான கௌரைக் கைப்பற்றி, ராஜ்மஹாலுக்கு மேற்கே இருந்த ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒப்படைக்குமாறும் ஆண்டுதோறும் 9 லட்சம் டங்காக்கள் வரி செலுத்துமாறும் மஹ்மூத் ஷாவைக் கட்டாயப்படுத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மஹ்மூத் ஷா அந்தத் தொகையைச் செலுத்த மறுத்ததுடன், ஷேர் கானின் வரி வசூல் அதிகாரியும் கொல்லப்பட்டார். இதையடுத்து, அப்போது ஷேர் ஷா என்று அழைக்கப்பட்ட ஷேர் கான் மீண்டும் வங்காளத்தின் மீது படையெடுத்து, மஹ்மூத் ஷாவின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

வங்காளத்தைக் கைப்பற்ற நான்கு முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அபுல் ஃபஸல் அல்லாமியின் 'அக்பர்நாமா' நூலின்படி, கிழக்கு இந்தியாவில் வளர்ந்து வந்த ஆப்கன் செல்வாக்கைத் தடுக்க 1538-ஆம் ஆண்டு ஹுமாயூன் ஒரு பெரிய படையுடன் கங்கைச் சமவெளியை நோக்கி முன்னேறினார்.

ஷேர் ஷா பிகாரின் உள்பகுதிக்கு பின்வாங்கினார். இதனால் ஹுமாயூனால் வங்காளத்தின் தலைநகரை எளிதில் கைப்பற்ற முடிந்தது. ஆனால், அடுத்த ஆண்டே டெல்லியில் கிளர்ச்சி ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், பருவமழை வெள்ளத்தால் சூழப்பட்ட டெல்டா பகுதியிலிருந்து ஹுமாயூன் பின்வாங்கி வட இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

வங்காளத்தின் நிர்வாகத்தைத் தனது அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் ஷேர் ஷா. 1539-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி மேற்கு பிகாரில் உள்ள சௌசாவில் ஹுமாயூனை தோற்கடித்த அவர், வங்காளம் மற்றும் டெல்லி ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் முகலாயர்களை வெளியேற்றினார். ஹுமாயூன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்த 16 ஆண்டுகளுக்கு, வங்காளத்தைத் தவிர வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆப்கன்கள் ஆட்சி செய்தனர்.

1556-ஆம் ஆண்டு ஹுமாயூன், ஷேர் ஷாவின் வாரிசுகளிடமிருந்து டெல்லியை மீண்டும் கைப்பற்றினார். இதையடுத்து ஏராளமான ஆப்கன்கள் வங்காளத்துக்குத் திரும்பினர். ஷேர் ஷாவின் குடும்பத்தினர் அங்கு ஆட்சி செய்தனர். 1564-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கன் தலைவர் தாஜ் கான் கரானியின் (1564–1565) குடும்பத்தினர் ஆட்சியை நிறுவினர்.

அக்பரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட வங்காள ஆட்சியாளர்கள்

1560-களில் அக்பரின் தலைமையில் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு வேகமாக விரிவடையத் தொடங்கியது. அபுல் ஃபஸலின் கூற்றுப்படி, முகலாயர்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை உணர்ந்த சுலைமான் கரானி (1565–1572), அக்பரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

சுலைமான் வெளியிட்ட நாணயங்களில் அக்பரின் பெயர் பொறிக்கப்படத் தொடங்கியது. தொழுகையின்போது நடத்தப்படும் பிரசங்கங்களிலும் அக்பரின் பெயர் குறிப்பிடப்பட்டது. மறுபுறம், பிரதமர் லோடி கான், பரிசுகளையும் விருந்துகளையும் அளித்து முகலாய அரசவையை மகிழ்விப்பதில் தீவிரமாக இருந்தார்.

ஆனால், சுலைமான் ரகசியமாக ஆப்கன் படையின் பலத்தைத் தொடர்ந்து அதிகரித்தார். பெரும் செல்வத்தையும் ஏராளமான யானைகளையும் திரட்டினார். 1568-ஆம் ஆண்டு வட இந்தியாவில் கடைசி சுதந்திர இந்து ஆட்சி இருந்த ஒடிசா மீது படையெடுத்தார். நெமத்துல்லாவின் 'தாரிக்' (வரலாறு) நூலின்படி, சுலைமான் பூரி ஜெகந்நாதர் கோயிலையும் கொள்ளையடித்தார்.

முதலில் பார்க்கும்போது இந்த நடவடிக்கை மத வழக்கத்துக்கு எதிரானதாகத் தோன்றலாம். ஆனால், இதற்குப் பின்னால் முக்கியமாக அரசியல் காரணங்களே இருந்தன. ஒடிசாவின் மன்னர் முகுந்த் தேவ், அக்பருடன் இணைந்ததுடன், சுலைமானின் அரியணைக்கு உரிமை கோரிய இப்ராஹிம் சூருக்கும் அடைக்கலம் அளித்திருந்தார்.

1572-ஆம் ஆண்டு அக்டோபரில் சுலைமான் இறந்த உடனேயே, அவரது குடும்பத்துக்குள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ரத்தக்களரி போராட்டம் தொடங்கியது.

அவரது மகன் தாவூத், தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டு, தொழுகைப் பிரசங்கங்களில் தனது பெயரைச் சொல்லச் செய்து, தான் சுதந்திரமான ஆட்சியாளர் என்று அறிவித்தார். இதனால் அக்பருக்கு வங்காளத்தின் மீது படையெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

1574-ஆம் ஆண்டு அக்பர் தானே ஒரு பெரிய படையுடன் பாட்னாவை அடைந்தார். ஆப்கன்களைத் தோற்கடித்த பிறகு, வங்காளத்தின் மீது படையெடுக்கும் பொறுப்பை முனிம் கானிடம் ஒப்படைத்தார்.

சுமார் 20,000 வீரர்களைக் கொண்ட படையுடன் முனிம் கான் கங்கை நதிக்கரையோரமாக முன்னேறினார். ஆப்கன் படை பின்வாங்கியது. முனிம் கான் டாண்டாவை அடைந்தார். இறுதியில் ஆப்கன்கள் எந்த எதிர்ப்பும் இன்றி தலைநகரை முகலாயர்களிடம் ஒப்படைத்தனர்.

1574 – 1610: வங்காளத்தில் முகலாய ஆட்சியின் தொடக்க கால அனுபவம்

ஆனால், தலைநகரைக் கைப்பற்றுவதும் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் மீது அதிகாரத்தை நிலைநாட்டுவதும் இரு வெவ்வேறு விஷயங்களாக இருந்தன.

டாண்டாவில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட மாகாணத்தின் நிதி நிர்வாகத்தை முனிம் கானும் அக்பரின் நிதியமைச்சர் ராஜா தோடர்மாலும் சீரமைத்துக் கொண்டிருந்தபோது, ஆயிரக்கணக்கான ஆப்கன்கள் அடர்ந்த காடுகளில் மறைந்திருந்தனர்.

அடுத்த நான்கு தசாப்தங்களுக்கு ஆப்கன்கள் முகலாயர்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்களுடன் முஸ்லிம் மற்றும் இந்து நிலப்பிரபுக்கள், போர்த்துகீசியக் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்களும் இணைந்தனர். வட இந்தியாவில் இருந்து வந்த முகலாயர்களை அவர்களில் பலர் வெளியாட்களாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் கருதினர்.

1574-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இந்த நீண்ட போராட்டத்தை, வங்காளத்தில் இருந்து "எதிர்ப்பின் முட்களை அகற்றும்" முயற்சி என்று அபுல் ஃபஸல் விவரிக்கிறார்.

முகலாயப் படை ஆப்கன்களைத் துரத்திச் சென்று குதாகாட், சட்கான், சோனார்கான் மற்றும் ஃபதேஹாபாத் ஆகிய பகுதிகளை அடைந்தது. 1575-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி தெற்கு மித்னாப்பூரில் நடைபெற்ற டுகராய் போரில் தோடர்மாலும் முனிம் கானும் சுல்தான் தாவூத் கானைத் தீர்மானகரமாகத் தோற்கடித்தனர்.

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, கொல்லப்பட்ட எதிரிகளின் மண்டை ஓடுகளைக் கொண்டு முகலாயர்கள் எட்டு மினார்களை (கோபுரங்கள்) கட்டியதாக ஈட்டன் குறிப்பிடுகிறார். எனினும், போரில் இத்தகைய கொடூரம் வழக்கமான ஒன்றாக இருக்கவில்லை.

ரிச்சர்ட் ஈட்டனின் கூற்றுப்படி, வங்காளத்தின் அடர்ந்த காடுகளில் முகலாய குதிரைப்படை மிகவும் திறமையாகச் செயல்பட முடியவில்லை. எனவே, எதிரிகளைக் கட்டுப்படுத்த முகலாயர்கள் லஞ்சம், சமரசம், ராஜீய முயற்சிகள், தங்களது பலத்தை வெளிப்படுத்துதல் மற்றும் எதிரிகளிடையே இருந்த பிளவுகளைப் பயன்படுத்துதல் போன்ற உத்திகளைக் கையாண்டனர்.

இந்த அணுகுமுறை அக்பரின் அரசாட்சி குறித்த சிந்தனையுடனும் பொருந்தியது. எதிரிகளை அழிப்பது இதன் நோக்கமல்ல, வெற்றி பெற்ற மன்னரின் உச்ச அதிகாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துவதே நோக்கமாக இருந்தது.

இதன் ஒரு பகுதியாக, 1575-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முகலாய படை முகாமில் நடைபெற்ற 'சமரச விழாவில்', தாவூத் கான் முறையாக முகலாய ஆட்சியை ஏற்றுக்கொண்டார். தனது வாளை உருவி கீழே வைத்தார். பின்னர் முனிம் கான் அவருக்கு ஒரு முகலாய வாள், வேலைப்பாடுகளுடன் கூடிய இடைக்கச்சை மற்றும் அரச உடைகளை வழங்கினார்.

தாவூத் முகலாய உடையை அணிந்து, அக்பரின் தலைநகரான ஃபதேபூர் சிக்ரியை நோக்கி முறையாகத் தலைவணங்கினார்.

இதன் மூலம் ஆப்கன் சுல்தான்களின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்து, வங்காளம் முகலாயப் பேரரசரின் உச்ச அதிகாரத்துக்கு உட்பட்டது.

ஆனால், புதிய மாகாணத்தை முகலாயப் பேரரசுடன் நேரடியாக இணைப்பதில் இன்னும் பல சிக்கல்கள் இருந்தன.

டுகராய் போரின் வெற்றிக்குப் பிறகு முனிம் கான் வடக்கு வங்காளத்துக்குத் திரும்பியபோது, நிர்வாகத் தலைமையகத்தை டாண்டாவிலிருந்து பழமையான கௌர் நகரத்துக்கு மாற்றினார். 1565-ஆம் ஆண்டு சுலைமான் கரானியின் ஆட்சிக்காலத்திலிருந்து டாண்டா வங்காளத்தின் தலைநகராக இருந்தது. இந்த முடிவு பின்னர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கங்கையின் பிரதான நீரோட்டம் திசைமாறியதால், வேகமாகப் பாய்ந்த நதியின் நீரோடைகள் தேங்கி நிற்கும் நீராக மாறி, தொற்றுநோய்களைப் பரப்பும் இடங்களாக மாறின.

1575-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு வந்த மாதங்களில் கடுமையான தொற்றுநோய் பரவியது. இதில் ஆயிரக்கணக்கான முகலாய அதிகாரிகள் மற்றும் வீரர்களும், எண்ணற்ற பொதுமக்களும் உயிரிழந்தனர்.

அபுல் ஃபஸலின் வார்த்தைகளில், "மரணத்தின் அச்சம் அனைவரையும் சூழ்ந்திருந்தது."

அக்பரின் ராணுவ நிர்வாகத்தில் பெரும் கிளர்ச்சி

வங்காளத்தைக் கைப்பற்ற நான்கு முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?

'பெங்கால் முஸ்லிம்ஸ், 1871-1906: எ க்வெஸ்ட் ஃபார் ஐடண்டிட்டி' (Bengal Muslims, 1871–1906: A Quest for Identity) என்ற நூலில் ரஃபியுத்தீன் அகமது குறிப்பிட்டுள்ளபடி, இந்தப் பேரழிவு வங்காளம் வெளிநாட்டு மற்றும் விரோதமான பிராந்தியம் என்ற முகலாய அதிகாரிகளின் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. அங்கு குறுகிய காலத்துக்கு பணியாற்றலாம்; ஆனால் நிரந்தரமாகக் குடியேற முடியாது என்ற எண்ணம் உருவானது.

1575-ஆம் ஆண்டு அக்டோபரில் முனிம் கான் இறந்த பிறகு முகலாய அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல் மற்றும் போட்டியைப் பயன்படுத்திக் கொண்ட தாவூத் கான் மீண்டும் அக்பரின் அதிகாரத்திலிருந்து விலகினார். சிதறியிருந்த தனது ஆப்கன் படையை மீண்டும் திரட்டி, வங்காளத்திலிருந்து முகலாயர்களை வெளியேற்ற முயன்றார்.

அக்பர் புகழ்பெற்ற முகலாயத் தளபதி கான் ஜஹானை வங்காள ஆளுநராக நியமித்தார். அனுபவம் வாய்ந்த ராஜா தோடர்மாலுடன் அவர் நவம்பரில் மீண்டும் நிறுவப்பட்ட தலைநகரான டாண்டாவை அடைந்தார்.

அடுத்த ஆண்டு ஜூலையில், மத்திய வங்காளத்தில் பத்மா நதிக்கரையில் தாவூத் கானின் படைக்கும் முகலாயப் படைக்கும் இடையே தீர்மானகரமான போர் நடைபெற்றது. ஆப்கன்கள் தோற்கடிக்கப்பட்டனர்; அவர்களது முக்கியத் தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். மழையால் ஏற்பட்ட சேற்றில் தாவூத் கானின் குதிரை சிக்கிக்கொண்டதால், அவர் உயிருடன் பிடிபட்டார்.

இந்த முறை முகலாயர்கள் எந்தச் சலுகையும் வழங்கவில்லை. கான் ஜஹானின் உத்தரவின்படி தாவூத் கான் தலை துண்டிக்கப்பட்டார். அவரது உடல் டாண்டாவில் தூக்கிலிடப்பட்டது; அவரது தலை போரில் பெற்ற வெற்றியின் அடையாளமாக அக்பரின் அரசவைக்கு அனுப்பப்பட்டது.

ராஜ்மஹால் போரில் தாவூத் கான் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அக்பர் வங்காளத்தைப் பேரரசின் 12 முக்கிய மாகாணங்களில் ஒன்றாக இணைத்தார். இந்த மாகாணங்கள் 'சுபாக்கள்' என்று அழைக்கப்பட்டன.

இப்போது வங்காளத்தின் மீதான முகலாய ஆட்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறுதியானதாகத் தோன்றியது. அதே நேரத்தில், அக்பரின் ராணுவ நிர்வாகத்தில் ஒரு பெரிய கிளர்ச்சி வெடித்தது.

முகலாய ராணுவ அமைப்பில் நிலவிய உள்நாட்டுப் பிரச்னைகளால், வங்காள டெல்டா சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நேரடி முகலாயக் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்தது. 1582–83-ஆம் ஆண்டுகளில் அக்பர் பெரும் ராணுவப் படையைப் பயன்படுத்தி இந்தக் கிளர்ச்சியை அடக்கினார். அதன் பின்னர் முகலாயர்கள் உள்ளூர் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினர். எதிர்ப்பின் மையம் வடமேற்கு வங்காளத்திலிருந்து கிழக்கில் இருந்த பரந்த டெல்டா பகுதிக்கு மாறியது. இந்தப் பகுதியை முகலாயர்கள் 'பாட்டி' என்று அழைத்தனர்.

இங்கு வங்காள முஸ்லிம் தலைவர் ஈசா கானின் தலைமையில் கிளர்ச்சி தொடங்கியது. பண்டைய சோனார்கான் நகருக்கு அருகிலிருந்த கதராபுவில் அவரது தலைமையகம் அமைந்திருந்தது.

பாபா கான் கக்ஷால், மாசும் கான் காபூலி போன்ற ஆப்கன் தலைவர்கள் டாண்டாவில் இருந்த அரசு கோட்டையைக் கைப்பற்றி, முகலாய ஆளுநரைக் கொன்று தங்களது ஆட்சியை நிறுவினர்.

டெல்டா பகுதியைச் சேர்ந்த சில இந்து நிலப்பிரபுக்களும், பிகாரைச் சேர்ந்த அதிருப்தியடைந்த சில அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்தனர். மாசும் கான் காபூலி கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக முகலாயர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டார்.

வங்காளத்தைக் கைப்பற்ற நான்கு முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?

1584-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஈசா கான் கடற்போரில் முகலாய ஆளுநரைத் தோற்கடித்தார். அதன்பிறகு சுமார் 15 ஆண்டுகள் கிழக்கு வங்காளத்தின் டெல்டா பகுதியைத் தனித்து ஆட்சி செய்தார். இருப்பினும், அரசியல் வசதிக்காக அக்பரின் பெயரளவிலான மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.

1586-ஆம் ஆண்டு ஆங்கிலேய வணிகர் ரால்ஃப் ஃபிட்சும் கிழக்கு வங்காள மக்கள் அக்பருக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்களாக இருந்ததாகவும், ஏராளமான ஆறுகள் மற்றும் தீவுகள் இருந்ததால் முகலாய குதிரைப்படையால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈசா கானை அந்தப் பிராந்தியத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளராகவும், மற்ற ஆட்சியாளர்களின் தலைவராகவும் ஃபிட்ச் விவரித்தார். பின்னாளில் ஐரோப்பிய ஆவணங்களில் இந்த உள்ளூர் தலைவர்கள் 'பாரா புய்யான்' என்று குறிப்பிடப்பட்டனர்.

இந்தத் தலைவர்களின் பாரம்பரிய கடற்படைப் போர்முறையை எதிர்கொள்வதற்கான உத்திகளை முகலாயர்கள் படிப்படியாகக் கற்றுக்கொண்டனர். 1586-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காடுகள் மற்றும் நதிப் பகுதிகள் வழியாக முன்னேறி சிட்டகாங் சென்றடைந்தனர். அங்கு அரக்கான் (Arakan) ஆட்சியாளர் அவர்களுக்கு யானைகளைப் பரிசாக வழங்கினார்.

ஈசா கானும் ஒரு கட்டத்தில் சமரசம் செய்துகொண்டார். ஆனால், கிழக்கு வங்காளத்தில் நிரந்தர நிர்வாக அதிகாரத்தை முகலாயர்களால் ஏற்படுத்த முடியவில்லை. 1594-ஆம் ஆண்டுக்குள், முகலாயர்களுக்கு கப்பம் செலுத்தும் பாட்டி நிலப்பிரபுவாக ஈசா கானை அவர்கள் கருத வேண்டியிருந்தது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, 1594-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அக்பர் ராஜா மான் சிங்கை வங்காள ஆளுநராக நியமித்தார்.

டெல்டாவின் வடமேற்கு முனையில் இருந்த ராஜ்மஹாலை மாகாணத் தலைநகராக மான் சிங் ஆக்கினார். 1595-ஆம் ஆண்டின் இறுதியில் பெரும் படையுடன் பாட்டியை நோக்கி முன்னேறினார். ஆனால், கேதார் ராய், பட்குன்வார் நாராயண் போன்ற செல்வாக்கு மிக்க இந்துத் தலைவர்கள் முகலாயர்களிடம் சரணடைவதற்குப் பதிலாக ஈசா கானிடம் அடைக்கலம் புகுந்தனர்.

வங்காளத்தைக் கைப்பற்ற நான்கு முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?

1597-ஆம் ஆண்டு ஆகஸ்டில், ஈசா கான் காபூலின் மாசும் கானுடன் இணைந்து தனது போர்க்கப்பல்களின் உதவியுடன் முகலாயக் கடற்படையைத் தோற்கடித்தார். இந்தப் போரில் ராஜா மான் சிங்கின் மகன்களும் கொல்லப்பட்டனர். எனினும், இந்தக் காலகட்டத்தில்தான் ஈசா கானின் அதிகாரம் உச்சத்தில் இருந்தது.

1599-ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு, அவரது எதிரிகள் படிப்படியாகச் சிதறத் தொடங்கினர். ஆப்கன் கூட்டாளிகள் அவரது மகன் தாவூத்தைச் சுற்றி திரண்டனர். கேதார் ராய் அரக்கானில் இருந்த முகலாயக் கூட்டாளிகளுடன் இணைந்தார்.

இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மான் சிங், எஞ்சியிருந்த எதிரிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். 1602-ஆம் ஆண்டு டாக்காவை தனது ராணுவ நடவடிக்கைகளின் மையமாக மாற்றினார்.

முதலில் தாவூத்தின் ஆப்கன் கூட்டாளிகள் பின்வாங்கினர். பின்னர் 1603-ஆம் ஆண்டு கேதார் ராயும் அரக்கான் படைகளும் தோற்கடிக்கப்பட்டனர். கேதார் ராய் கொல்லப்பட்டார். முகலாயப் படைகள் கீழ் டெல்டா பகுதிக்குப் பின்வாங்கின. சக்திவாய்ந்த ஆப்கன் தலைவர் உஸ்மான் கான் மைமென்சிங்கின் காடுகளில் மறைந்துகொண்டார்.

இதற்கிடையில், அரக்கான் படைகள் டாக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தாக்கின. இதற்குப் பதிலளிக்கும் வகையில், மான் சிங் 1604-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களின் உதவியுடன் முகலாயக் கடற்படையை உருவாக்கினார். அரக்கான் கடற்படை நடத்திய படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதில் அவர் வெற்றி பெற்றார். கூச் பெஹாரும் 1609-ஆம் ஆண்டு வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது; காமரூப் 1612-ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.

1600-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான கோவா ஜெசூயிட் கிறிஸ்தவத் துறவிகளின் ஆண்டறிக்கையிலும் பாரா புய்யான்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். முன்னாள் வங்காள சுல்தானகத்தின் ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய தலைவர்களின் கூட்டணியாக அவர்கள் அதில் விவரிக்கப்படுகின்றனர். அவர்களில் கேதார் ராய், ராஜா பிரதாபாதித்யா மற்றும் முக்கியமாக ஈசா கான் ஆகியோர் அடங்குவர்.

வரலாற்றாசிரியர் தபன்ராய் சௌத்ரியின் கூற்றுப்படி, வங்காளத்தில் முகலாய ஆட்சி நிலையாக ஒருங்கிணைக்கப்பட்டதும் ஒப்பீட்டளவில் நீண்டகால அமைதி தொடங்கியதும் 1594-ஆம் ஆண்டில்தான். எனினும், கிழக்கு வங்காளத்தில் எதிர்ப்பு முழுமையாகத் தணிவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆனது.

'முகலாய அதிகாரத்தை வலுப்படுத்துதல்'

அபுல் ஃபஸலின் கூற்றுப்படி, ராஜா மான் சிங் டாக்காவைத் தனது தலைநகராக மாற்றி, ராணுவ முகாம்களின் நிர்வாகத்தைத் திறமையான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ஆனால், அவர் அங்கு நீண்ட காலம் தங்கவில்லை. 1605-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உடல்நலம் குன்றியிருந்த அக்பரைச் சந்திக்க ஆக்ராவுக்குச் சென்றார். அதே ஆண்டில் அக்பர் இறந்தார்; ஜஹாங்கீர் அரியணை ஏறினார்.

ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் (1605–1627), வங்காளத்தில் முகலாயர்களின் நடவடிக்கைகள் கிளர்ச்சியாளர்களை அடக்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. வங்காளத்தில் நிரந்தர நிர்வாக அதிகாரத்தை நிறுவும் புதிய கட்டம் தொடங்கியது.

ஆரம்பத்தில், கிழக்கு வங்காளத்தில் சக்திவாய்ந்த ஆப்கன் தலைவர்களுக்கு, குறிப்பாக உஸ்மான் கானுக்கு எதிரான முகலாய நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, 1608-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜஹாங்கீர் தனது நம்பிக்கைக்குரிய தளபதியான அலாவுதீன் இஸ்லாம் கானை வங்காள ஆளுநராக நியமித்தார். சுமார் 37 வயதான இஸ்லாம் கான், பேரரசரின் வளர்ப்புச் சகோதரரும் சிறுவயது நண்பருமாவார்.

இஸ்லாம் கான் ராணுவ வலிமையுடன், ராஜாங்கத்தையும் தனது உத்தியில் முக்கியப் பகுதியாகக் கொண்டிருந்தார். உள்ளூர் தலைவர்களை, குறிப்பாக பாரா புய்யான்கள் மற்றும் சக்திவாய்ந்த ஜமீன்தார்களை, சிறப்பு உரிமைகள், நிலப்பகுதிகள் மற்றும் அரச மரியாதைகளை வழங்கி முகலாய ஆட்சிக்குள் கொண்டுவர முயன்றார்.

இதன் விளைவாக, பல பகுதிகள் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்தாமலேயே முகலாய ஆட்சியை ஏற்றுக்கொண்டன. 1610-ஆம் ஆண்டு இஸ்லாம் கான் டாக்காவை வந்தடைந்து, கிழக்கு வங்காளத்தில் முகலாய நடவடிக்கைகளின் மையமாக அதை மாற்றினார்.

இஸ்லாம் கானின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று, ஈசா கானின் மகனும் பாட்டி (Bhati) பகுதியின் மிகவும் சக்திவாய்ந்த தலைவருமான மூசா கானைச் சரணடையச் செய்ததாகும். அவரிடம் 700 போர்க்கப்பல்கள் இருந்தன. அவற்றில் பல பீரங்கிகளுடன் ஆயுதம் தாங்கியிருந்தன. ஆனால், முகலாயக் கடற்படையில் 295 கப்பல்களும் 12,000 மாலுமிகளும் இருந்தனர்.

இறுதியில் மூசா கான் முகலாயர்களிடம் சரணடைந்தார். பின்னர் மீண்டும் கிளர்ச்சி செய்ததால் டாக்காவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 1613-ஆம் ஆண்டு காசிம் கான் வங்காள ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, மூசா கான் விடுவிக்கப்பட்டு முகலாய ராணுவ நடவடிக்கையில் இணைந்தார். திரிபுராவுக்கு எதிரான படையெடுப்பில் 5,000 துப்பாக்கி வீரர்கள் மற்றும் 50 யானைகள் கொண்ட படைக்குத் தலைமை தாங்கினார். கைப்பற்றப்பட்ட மன்னரை அவரே டாக்காவுக்கு அழைத்து வந்தார்.

இந்தக் காலகட்டத்தில், கிழக்கு வங்காளத்தில் முகலாய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கடைசி பெரிய ஆப்கன் எதிர்ப்புக்கும் இஸ்லாம் கான் முடிவு கட்டினார். 1612-ஆம் ஆண்டு உஸ்மான் கான் தோற்கடிக்கப்பட்டு சில்ஹெட் மலைப்பகுதியில் கொல்லப்பட்டார். இதன் மூலம் ஆப்கன்களின் முக்கியமான ஆயுத எதிர்ப்புக்கான கடைசி முயற்சி முடிவுக்கு வந்தது.

1613-ஆம் ஆண்டு இஸ்லாம் கான் இறந்தபோது, ராணுவ வலிமை மற்றும் அரசியல் சமரசம் ஆகிய இரண்டின் மூலம் டெல்டா பகுதியில் முகலாய அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இப்ராஹிம் கானின் ஆளுநர் பதவிக் காலத்தில் (1617–1624), மிர்சா நாதனின் பதிவுகள், மூசா கான் மற்றும் பாட்டி (Bhati) பகுதியைச் சேர்ந்த பிற பாரா புய்யான் தலைவர்கள் கிழக்கு வங்காளத்தில் நடைபெற்ற முகலாய ராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றதாகக் காட்டுகின்றன.

இதன் மூலம், ஒரு காலத்தில் முகலாய ஆட்சிக்கு எதிராகப் போராடிய இந்தத் தலைவர்கள், பின்னர் அதே பேரரசின் ராணுவ மற்றும் நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாக மாறியதை அறிய முடிகிறது.

"டாக்காவைத் தேர்ந்தெடுத்தது இந்தப் புதிய காலகட்டத்தின் அடையாளமாகவும் இருந்தது"

வங்காளத்தைக் கைப்பற்ற நான்கு முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?

பத்மா-கங்கை நதி அமைப்புடன் இணைந்திருந்த டாக்கா, மேற்கு மற்றும் கிழக்கு வங்காளம், வட இந்தியா மற்றும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு வசதியான இடமாக இருந்தது.

1610-ஆம் ஆண்டு முதல் அடுத்த சில தசாப்தங்களுக்கு, முகலாயர்கள் டாக்காவை நிர்வாக மற்றும் வர்த்தக மையமாகப் பயன்படுத்தினர். கிழக்கு டெல்டாவில் இருந்த பரந்த காடுகளைப் படிப்படியாக விவசாய நிலங்களாக மாற்றினர்.

அதே நேரத்தில், போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கில வணிகர்களும் கடல் வழியாக வங்காளத்துக்குள் நுழைந்தனர். இதனால், முன்பு ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிழக்கு வங்காளம், ஒருபுறம் முகலாய அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாகவும் மறுபுறம் விரிவடைந்து வந்த ஐரோப்பிய வர்த்தக அமைப்பின் ஒரு பகுதியாகவும் மாறியது.

இந்த அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துக்கும் மையமாக இருந்தது டாக்கா. அதிகாரப்பூர்வமாக ஜஹாங்கீர்நகர் என்று அழைக்கப்பட்ட டாக்கா, 1610-ஆம் ஆண்டு முகலாயத் தலைநகராக மாறிய பிறகு, 17-ஆம் நூற்றாண்டில் அதிகாரம், வர்த்தகம் மற்றும் செல்வாக்கின் முக்கிய மையமாக வளர்ந்தது.

1640-ஆம் ஆண்டு அங்கு வந்த போர்த்துகீசிய மதகுரு ஃப்ரே செபாஸ்தியாவ் மன்ரிக், டாக்காவை "கங்கையின் வர்த்தக மையம்" என்று விவரித்தார். அந்நகரின் மக்கள்தொகை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாக அவர் மதிப்பிட்டார்.

நகரின் அபரிமிதமான செல்வமும் மன்ரிக்கை வியப்பில் ஆழ்த்தியது.

அவரது பதிவுகளில் பணக்கார இந்து வணிகர்கள், குறிப்பாக க்ஷத்திரிய வணிகர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த இந்த வணிகர்கள், வங்கியாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் பின்னர் மார்வாரி சமூகத்தினர் என்று பரவலாக அறியப்பட்டனர். முகலாயப் பேரரசு விரிவடைந்தபோது, அவர்களின் வர்த்தக மற்றும் நிதி வலையமைப்புகளும் வங்காளம் முழுவதும் விரிவடைந்தன.

முகலாயர் ஆட்சியும் வணிக-வங்கியாளர்களின் எழுச்சியும்

வங்காளத்தைக் கைப்பற்ற நான்கு முகலாயப் பேரரசர்கள் 75 ஆண்டுகளாக போரிட்டது ஏன்?

ராணுவ வலிமையுடன், முகலாய ஆட்சியை வங்காளத்தில் நிறுவுவதில் நிதி வலையமைப்புகளும் முக்கியப் பங்கு வகித்தன.

முகலாய அதிகாரிகள் ராணுவச் செலவுகளுக்கு நில வருவாயைப் பயன்படுத்தும் கொள்கையைக் கொண்டிருந்தனர். ஆனால், கூடுதல் நிதி தேவைப்பட்டபோது நடைமுறையில் அவர்கள் கடன் வழங்குபவர்களிடமிருந்து கடன் பெற்றனர்.

உதாரணமாக, 1621-ஆம் ஆண்டுவாக்கில் மிர்சா நாதன், வீரர்களையும் ராணுவப் பொருட்களையும் வடக்கு வங்காளத்துக்குக் கொண்டு செல்வதற்காகப் படகுகளை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்க ஜஹாங்கீர்நகரின் 'வணிகப் பெருமக்களிடம்' இருந்து 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இதற்கு முன்பு குச் பகுதியில் இருந்த முகலாய ராணுவத் தளமான குல்லாவில் இந்து கடன் வழங்குபவர்களிடமிருந்து 30,000 ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

முகலாயப் படை சென்றடைந்த இடமெல்லாம், வணிக-வங்கியாளர்களின் நிதி வலையமைப்பும் தொலைதூர எல்லைப் பகுதிகளுக்கு விரிவடைந்ததை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன.

கிழக்கு வங்காளம் அதன் ஜவுளி மற்றும் கப்பல் கட்டுமானத் தொழில்களுக்காக குறிப்பாக அறியப்பட்டது. பட்டு, பருத்தித் துணி, எஃகு, கரும்பு மற்றும் பிற விவசாய மற்றும் தொழில்துறைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

1576 முதல் 1717-ஆம் ஆண்டு வரை, முகலாயப் பேரரசரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் வங்காளம் நிர்வகிக்கப்பட்டது. 1666-ஆம் ஆண்டு முகலாயர்கள் அரக்கானிடமிருந்து சிட்டகாங்கைக் கைப்பற்றி, முகலாய வங்காளத்துடன் இணைத்தனர். இதன் மூலம் அந்தத் துறைமுகத்தின் மீதான வங்காள ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு எல்லையில் இருந்த மலைப்பகுதி ஆட்சியாளர்கள் சிலருடன் கப்பம் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் ஷாயிஸ்தா கான் கிழக்கு வங்காளத்தில் முகலாய அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தினார். பின்னர் வந்த ஆளுநர்கள் ஐரோப்பிய வணிகர்கள் வர்த்தக நிலையங்களை அமைக்க அனுமதித்தனர்.

ஆனால், 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாகாண ஆளுநர்களின் சுயாட்சி அதிகரிக்கத் தொடங்கியது. 1717-ஆம் ஆண்டு முர்ஷித் குலி கான் வங்காளத்தின் நவாபாக நியமிக்கப்பட்ட பிறகு, தலைநகர் டாக்காவிலிருந்து முர்ஷிதாபாத்துக்கு மாற்றப்பட்டது. வங்காளத்தில் முகலாய மாகாண ஆட்சி முடிவுக்கு வந்து நவாப் ஆட்சி தொடங்கியது. இந்த ஆட்சிப் பகுதி பிகார் மற்றும் ஒடிசாவையும் உள்ளடக்கியிருந்தது.

18-ஆம் நூற்றாண்டுக்குள் வங்காளம் நடைமுறையில் சுதந்திரமான அரசாக மாறியது. இருப்பினும், நவாப் தொடர்ந்து முகலாயப் பேரரசரின் பெயரளவிலான மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்.

1757-ஆம் ஆண்டு பிளாசி போர் மற்றும் 1764-ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பிறகு கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. 1765-ஆம் ஆண்டு இரண்டாம் ஷா ஆலம், வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையை அந்நிறுவவனத்துக்கு வழங்கினார். 1793-ஆம் ஆண்டுக்குள் நிர்வாகமும் கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதனால் வங்காள நவாபிடம் நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லாமல், பெயரளவிலான ஆட்சியாளராக மட்டுமே இருந்தார்.

வங்காளத்தின் மீது திறம்பட ஆட்சியை நிறுவ முகலாயர்களுக்கு சுமார் 75 ஆண்டுகள் ஆனது. ஆனால், அடுத்த ஒன்றரை நூற்றாண்டில் அவர்களது அதிகாரம் படிப்படியாக அவர்களது கைகளிலிருந்து நழுவியது. இந்த நீண்ட வரலாற்றுப் பயணத்தில், டாக்கா அல்லது ஜஹாங்கீர்நகர் முகலாய வங்காளத்தின் எழுச்சியின் மிகப்பெரிய அடையாளமாக மாறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு