அட்லாண்டிக் பெருங்கடலில் விமானத்தை இறக்கியும் அனைவரும் உயிர் பிழைத்த 'அதிசயம்'

அட்லாண்டிக் பெருங்கடலில் விமானத்தை இறக்கியும் அனைவரும் உயிர் பிழைத்த அற்புதம்

பட மூலாதாரம், Handout Air Force Reserve Command 920th Rescue Wing

படக்குறிப்பு, விமானத்தில் இருந்த 11 பேரும் பல மணி நேரம் உயிர் காக்கும் மிதவையில் மிதந்தனர்.
    • எழுதியவர், அனா ஃபகுய்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பைலட் இயன் நிக்சன் தனது 25 ஆண்டுகால விமானப் பயண அனுபவத்தில், இது போன்ற ஒரு விபத்தை எதிர்கொண்டதில்லை.

இந்த விபத்தினால் அவரும் 10 பயணிகளும் அட்லாண்டிக் பெருங்கடலில் பல மணிநேரம் தத்தளிக்க நேரிட்டது.

செவ்வாய்க்கிழமை, பஹாமாஸின் இரண்டு தீவுகளுக்கு இடையே வழக்கமாக 20 நிமிடங்களில் முடிய வேண்டிய ஒரு பயணத்தின் போது, நிக்சன் அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டார்.

முதலில் நேவிகேஷன் சிஸ்டம் , பிறகு ரேடியோ, பின்னர் ஒரு என்ஜின், இறுதியாக மற்றொரு என்ஜினும் செயலிழந்தது.

"சிறிது நேரம் ரேடியோ மூலம் யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை," என்று கூறிய நிக்சன், "நான் பஹாமாஸின் ஃப்ரீபோர்ட் மற்றும் மயாமி ரேடியோவைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர்கள் நான் சொல்வதைக் கேட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னால் எந்தப் பதிலையும் பெற முடியவில்லை" என்று பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் நிக்சன் தெரிவித்தார்.

அந்த விமானம் பஹாமாஸின் அபாகோ தீவுகளில் உள்ள மார்ஷ் ஹார்பரிலிருந்து கிராண்ட் பஹாமா தீவின் ஃப்ரீபோர்ட்டிற்குச் சென்று கொண்டிருந்தது.

அந்த பஹாமிய பைலட், மயாமியில் இருந்து வடக்கே சுமார் 175 மைல் (289 கி.மீ) தொலைவில் நடுக்கடலில் விமானத்தை இறக்கினார். வேறு வழியே இல்லாதபோது எடுக்கப்படும் மிக இறுதியான ஒரு தற்காப்பு நடவடிக்கை இதுவாகும்.

"தண்ணீரில் மோதியவுடன், 'நாங்கள் சாகவில்லை' என்பதுதான் என் முதல் எண்ணமாக இருந்தது" என்று நிக்சன் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதனைத் தொடர்ந்து, ஒரு லைஃப் ராஃப்ட் (உயிர் காக்கும் படகு) மீது பல மணிநேரம் நீடித்த அந்தப் போராட்டத்தின் போது, பைலட்டும் பயணிகளும் மீட்புப் படையினர் தங்களைக் கண்டுபிடிப்பதற்காகக் காத்திருந்தனர்.

நிக்சன் அனைவரின் மன உறுதியையும் தக்கவைக்க முயன்றார்.

"'அடுத்த 10 நிமிடங்களில் ஒரு விமானம் வரும்' என நான் அவர்களிடம் சொன்னேன். அப்போது பயணிகளில் ஒருவர், 'சற்றுப் பொறுங்கள், எனக்கு ஏதோ சத்தம் கேட்டது?'என்றார்" எனக் கூறுகிறார் நிக்சன்.

அது அமெரிக்க விமானப்படையின் 920-வது மீட்புப் பிரிவின் ஹெலிகாப்டர் தூரத்தில் வரும் சத்தமாகும்.

அவசர கால சமிக்ஞை மூலம் ஆபத்தான சூழல் குறித்து அமெரிக்கக் கடலோரக் காவல்படைக்குத் தகவல் கிடைத்ததும், பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அந்தப் படைப்பிரிவு தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்காகத் திருப்பி விடப்பட்டது.

"அவர்கள் ஏற்கனவே சுமார் ஐந்து மணி நேரம் அந்தப் படகில் இருந்தனர்" என்று என்று கூறிய கேப்டன் ரோரி விப்பிள், "அவர்களைப் பார்த்த உடனேயே அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை சொல்ல முடியும்"என்றார்.

ஹெலிகாப்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய நேரம் வருவதற்கு முன்பே, அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பாக மீட்க மீட்புக் குழுவினர் போராடினர்.

"கடலில் விமானத்தை இறக்கி யாரேனும் உயிர் பிழைத்ததை நான் அறிந்ததே இல்லை" என்று மீட்புப் பணியில் உதவிய விமான கமாண்டர் மேஜர் எலிசபெத் பியோவதி கூறினார்.

"நான் பார்த்தவரை, அத்தனை பேரும் உயிர் பிழைத்திருப்பது ஒரு பெரிய அதிசயம்"என்கிறார் கமாண்டர் மேஜர் எலிசபெத்.

பிறகு, விமானத்தில் இருந்த 11 பேரும் புளோரிடா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

"நாங்கள் இறந்துவிடுவோம் என்றுதான் நினைத்தோம், அதனால் நாங்கள் காப்பாற்றப்பட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தோம்" என்று அந்த விமானத்தில் பயணம் செய்த ஒலிம்பியா அவுட்டன் கூறினார்.

பிறகு, "அது அப்படியே ஒரு சினிமா காட்சி போல இருந்தது"என்றும் குறிப்பிட்டார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பஹாமிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு