You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தது ஏன்? எஸ்.பி.வேலுமணி விளக்கம்
எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக தற்போது ஒன்றிணைந்துள்ளது.
இன்று (மே 27) எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர். பின்னர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட இருதரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிமுக கொறடாவாகவும் நியமிக்க கோரி கடிதம் வழங்கினர்.
மேலும், கொறடா விவகாரம் தொடர்பாக இருதரப்பும் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கிய கடிதத்தையும் திரும்பப் பெற்றனர். ஆனால், இந்த நிகழ்வுகளில் எஸ்.பி. வேலுமணி தரப்பின் முக்கிய முகமாக இருந்த சி.வி. சண்முகம் கலந்துகொள்ளவில்லை.
இது குறித்து எஸ்.பி. வேலுமணியிடம் கேட்டபோது, சி.வி. சண்முகம் தங்களுடன் தான் இருப்பதாக கூறினார்.
அத்துடன் எஸ்.பி. வேலுமணி மற்றும் சில அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் சி.வி. சண்முகத்தை நேரில் சந்திக்க சென்றனர்.
இதற்கிடையே, "கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை" என அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
முன்பு நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதனால், சட்டப்பேரவை மற்றும் கட்சி நிர்வாகம் என இரு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.
அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை விடுத்தது. மேலும், ஆதரவு அளித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு