"பதற்றமில்லா பட்டிதார்" - ஆர்சிபிக்கு 2 வது ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா?

ஆர்சிபி-க்கு 2வது ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பாரா கேப்டன் ரஜத் பட்டிதார்?

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பாபா இந்திரஜித்
    • பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரண்டாவது ஐபிஎல் கோப்பையைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடக்கும் ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. 17 ஆண்டு காலம் ஒரு கோப்பைக்காகக் காத்திருந்தவர்கள், தற்போது 2 ஆண்டுகளில் இரண்டாவது கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் ஒரு முக்கியமான துருப்புச் சீட்டாக இருப்பார் என்று நான் கருதுகிறேன்.

ரஜத் பட்டிதார் இந்த சீசனில் மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். இதுவரை 14 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 486 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடைய சிறந்த ஐபிஎல் சீசனாக இது உருவெடுத்திருக்கிறது. தன்னுடைய ஆட்டத்தின் மூலம் போட்டிகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நம்பர் 4 இடத்தில் வந்து விளையாடுவது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், அதை பட்டிதார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். அதிலும் 196.76 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவது அசாத்தியமானது. டாப் ஆர்டர் மற்றும் பந்துவீச்சைக் கடந்து ஆர்சிபி அணியின் செயல்பாட்டில் இவருடைய ஆட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குவாலிஃபயர் 1 போட்டியில் இதே குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி முதல் அணியாக ஆர்சிபி-யை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் அவர். இந்த இறுதிப் போட்டியிலுமே அவர் இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் ஆடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

பட்டிதாரின் செயல்பாடு எனக்குப் பிடித்திருப்பதற்கான இன்னொரு முக்கியக் காரணம், அவர் கேப்டன்சி நெருக்கடி எதுவுமே தன் பேட்டிங்கைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். கேப்டன்சியின் அழுத்தமும் நெருக்கடியும் ஒருசில கேப்டன்களின் பேட்டிங்கில் எப்படி நெகடிவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்த ஐபிஎல் சீசனிலேயே நாம் நிறையப் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது அது எதுவுமே பட்டிதாரின் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த சீசனில் பட்டிதாரின் பேட்டிங்கும், கேப்டன்சியும் ஏன் சிறப்பாக இருந்திருக்கிறது, அது எப்படி இறுதிப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்று இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி

பட்டிதாரின் பலமும், ஒற்றை பிரச்னையும்

பொதுவாக இதுபோன்ற பெரிய போட்டிகளில் டாப் ஆர்டர் நெருக்கடியை சந்திக்கக்கூடும். ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ் இருவரும் பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, ஆர்சிபி பவர்பிளேவில் சில விக்கெட்டுகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால், இந்தப் போட்டியில் பட்டிதாரின் பங்களுப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.

பட்டிதாரின் பெரிய பலமே சுழற்பந்துவீச்சுக்கு எதிரான அவரது ஆட்டம் தான். பல கேப்டன்கள் அவர் களத்தில் இருக்கும்போது ஸ்பின்னர்களைப் பயன்படுத்த யோசிக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் ஆட்டத்தின் மூலம் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் பட்டிதார்.

அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மிகச் சிறப்பாக ஸ்பின்னை எதிர்கொள்வார். டொமஸ்டிக் போட்டிகளில் அவர் நிறைய ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஐபிஎல் அரங்கில் அவர் அப்படி அதிகம் ஆடுவதில்லை. அவர் இறங்கி வந்து ஆடக்கூடியவரும் அல்ல. நிலையாக நின்று அடிக்ககூடியவர். அதனால், அவரால் பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது.

பட்டிதாரின் இன்னொரு பலம் அவர் பந்தின் லென்த்தை முன்கூட்டியே சரியாக கணிக்கக்கூடியவர். அப்படிச் செய்வதால் அவரால் சரியான ஷாட்டைத் தேர்ந்தெடுத்து அதை சிறப்பாக செயல்படுத்தவும் முடிகிறது. ஆஃப் சைட், ஆன் சைட் என எல்லாப் பக்கமும் அடிக்கக்கூடிய திறன் இருப்பதால், அவரால் பந்து எந்த லைனில் வந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 5 அரைசதங்கள் அடித்திருக்கிறார் ரஜத் பட்டிதார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 5 அரைசதங்கள் அடித்திருக்கிறார் ரஜத் பட்டிதார்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தப் போட்டியில் நிச்சயம் அவர் ரஷித் கான் போன்ற ஒரு ஸ்பின்னருக்கு சவால் கொடுப்பார். பட்டிதார் களத்தில் இருக்கும்போது சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த ஷுப்மன் கில் நிச்சயம் யோசிக்ககூடும்.

இந்த சீசன் பட்டிதார் பெரும் தாக்கம் ஏற்படுத்துவதற்கான சுழற்பந்துவீச்சுக்கு இணையாக வேகப்பந்துவீச்சிலும் அதிரடி காட்டுகிறார். அவர் வழக்கமாக வேகப்பந்துவீச்சை நன்கு விளையாடுவார். இருந்தாலும், இம்முறை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்கிறார்.

அதேசமயம், ஷார்ட் பால்களுக்கு எதிராக இம்முறை அவர் சற்று தடுமாறுவது போல் தெரிகிறது. முந்தைய சீசன்களில் ஷார்ட் பால்கள் வீசப்படும்போது அதை ஸ்கொயர் லெக் திசையில் ஆடுவார். ஆனால், இம்முறை ஃபைன் லெக் பக்கம் ஸ்கூப் ஆட முயற்சித்து விக்கெட்டுகளை இழந்திருக்கிறார். அதனால், குஜராத் பந்துவீச்சாளர்கள் பட்டிதாருக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியைக் கையாளக்கூடும். ககிஸோ ரபாடா, ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா போன்றவர்கள் பட்டிதாருக்கு சவால் தரலாம். இவர்களை சமாளிக்க ஒன்று பட்டிதார் நன்கு உள்ளே சென்று அந்தப் பந்தை ஃபைன் லெக் திசையில் பவுண்டரியாக்கலாம். இல்லை, அந்தப் பந்துகளில் சிங்கிள் ஆட முயற்சி செய்து, மற்ற பந்துகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அணுகுமுறையில் சிறு மாற்றம் தேவை.

நிதானமான கேப்டன்

இந்த சீசன் பட்டிதாரின் கேப்டன்சியுமே சிறப்பாக இருந்திருக்கிறது. எனக்கு இந்த சீசனில் மிகவும் பிடித்த 2 கேப்டன்கள் என்றால் அது பேட் கம்மின்ஸ் மற்றும் பட்டிதார் இருவரும் தான். கடந்த சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்ற பட்டிதார், அதை இந்த சீசனிலும் தொடர்ந்திருக்கிறார். தன் அணி மீதான எதிர்பார்ப்புகளை நன்றாக சுமந்திருக்கிறார்.

நாம் நிறையக் கேப்டன்களை அதிகமாகவே பாராட்டுவோம். உதாரணமாக கடந்த சில சீசன்களாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமைப்பன்பை நிறையவே கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அதேசமயம், பட்டிதார் அவ்வளவாக கவனம் ஈர்ப்பதில்லை. அவர் அமைதியாக இருந்துவிடுவதால் அவரைப் பற்றி நிறைய பேசுவதில்லை. ஆனால், அவர் அனைத்து பாராட்டுகலுக்கும் உரியவர்.

அவர், நட்சத்திர வீரர்கள் நிறைந்த அணிக்குள் சரியான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக்கொண்டிருக்கிறார். அத்தனை நட்சத்திரங்கள் நிறைந்த, பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட அணியை வழிநடத்துவதோ, அத்தனை ஆண்டு கால கோப்பை கனவை நிறைவேற்றுவதோ சாதாரண விஷயம் அல்ல.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குப் பின் அடுத்தடுத்த சீசன்களில் கோப்பை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பட்டிதார் பெறுவார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், எம்.எஸ்.தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குப் பின் அடுத்தடுத்த சீசன்களில் கோப்பை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை பட்டிதார் பெறுவார்

வெற்றிகள் பெறுவதாலேயே அவரைப் பாராட்டிவிடவில்லை. அவர் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். எப்போதும் அமைதியாக, நிதானமாக இருக்கிறார். அப்படி இருப்பதால், அவர் கடினமான சூழ்நிலைகளில் பதற்றம் அடைவதில்லை. அதனால், தவறான முடிவுகள் எடுப்பதில்லை. ஒரு அணியாக ஆர்சிபி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் அவ்வப்போது ஏற்படும் சறுக்கல்களை அவர் களத்தில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இதை நான் முன்பே கவனித்திருக்கிறேன். புச்சிபாபு தொடரில் அவரோடு இணைந்து விளையாடினேன். சுமார் 20 நாள்கள் ஒன்றாகப் பயணித்தோம். அப்போது அவர் கேப்டன் இல்லை. ஆனால், அமைதியாக நின்றுகொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பார். எந்த தருணத்திலும் பதற்றப்படாத அவர் குணத்தையும் அப்போதே கவனித்திருக்கிறேன். அவையெல்லாம் இப்போது ஆர்சிபி அணிக்கு பெரும் சாதகமாக மாறியிருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை ஆர்சிபி அணிக்கு நிச்சயம் பெரும் நெருக்கடி இருக்கும். அவர்கள் நடப்பு சாம்பியன் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட ஆமதாபாத் ஆடுகளத்தில், தங்கள் சொந்த ஊரில், சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஆடப்போகிறது. அது டைட்டன்ஸுக்கு சாதகமான விஷயம்.

ஆமதாபாத் சென்றாலே டைட்டன்ஸ் பேட்டர்களும், பந்துவீச்சாளர்களும் இன்னும் சிறப்பாக செயல்படத் தொடங்கிவிடுவார்கள். அப்படியிருக்கும்போது மிகவும் நிதானமாக இருக்கும் ஒரு கேப்டனால் தான், அந்த சவால்களையெல்லாம் சமாளிக்க முடியும். அதற்கு மிகவும் சரியான ஆளாக பட்டிதார் இருப்பார். அவருடைய அந்த குணங்கள், ஆமதாபாத்தும், டைட்டன்ஸும் கொடுக்கும் சவால்களை நிச்சயம் சமாளிக்கக்கூடியவை. இரண்டாவது கோப்பையை வென்று கொடுக்கக்கூடியவை.

(கட்டுரையாளர் பாபா இந்திரஜித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர். இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார். தற்போது தமிழ்நாடு அணிக்காக விளையாடிவரும் அவர் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு