தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதா? விசிக நிலைப்பாடு என்ன? முழு பின்னணி

அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் விஜய் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்
படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தவெக - பாமக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை இல்லை என இரு தரப்பும் கூறுகின்றன. ஆனாலும், பாமக இடம்பெறும் அணியில் இருக்க மாட்டோம் என்று விசிக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், அத்தகைய கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் தெரிவித்துள்ளார். பாமக தவெக கூட்டணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று இரு கட்சிகளின் தரப்பிலும் கூறப்பட்டாலும், இந்த விவகாரம் விசிகவின் அரசியல் நிலைப்பாட்டையும் தவெகவின் கூட்டணிக் கணக்குகளையும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தவெக அரசின் சில முடிவுகளைப் பாராட்டியது, தமிழக அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பு, சௌமியா அன்புமணியின் தந்தையும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமிக்கு தவெக அரசு தகைசால் தமிழர் விருது அறிவித்தது உள்ளிட்ட நிகழ்வுகள், பாமக - தவெக இடையே அரசியல் நெருக்கம் ஏற்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

ஆனால், தவெக கூட்டணியில் பாமகவை சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும், கூட்டணியின் நம்பகமான கூட்டாளி விசிக இருப்பதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால், பாமக குறித்த இந்த விவாதம் ஏன் தொடர்ந்து எழுகிறது? விசிக ஏன் தனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது?

தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதா? விசிக நிலைப்பாடு என்ன? முழு பின்னணி

பாமக தவெக-வை நோக்கி நகர்கிறதா?

தவெக அரசின் சில முடிவுகளைப் பாமக பாராட்டியிருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் நெருக்கம் ஏற்படுவதற்கான அறிகுறியா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தவெக அரசு அறிவித்தபோது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்த முடிவைப் பாராட்டினார். சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது பாமக நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைகளில் ஒன்று என்பதால், இந்த அறிவிப்பு இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் புரிதலைச் சுட்டிக்காட்டுவதாகப் பார்க்கப்பட்டது.

இவையனைத்தும், தவெக - பாமக உறவு குறித்த விவாதத்திற்கு வழிவகுத்தது. இது தவெக - விசிக உறவில் ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியதாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த நிகழ்வுகள் மட்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான ஆதாரமாகாது. தவெக கூட்டணியில் பாமக இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்று தவெக செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"தவெக கூட்டணியில் பாமகவை சேர்க்கும் எண்ணம் இல்லை. அது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. விசிக எங்கள் நம்பகமான, வலுவான கூட்டணி கட்சி. கூட்டணி விவகாரத்தைவிட, தனது தொண்டர்களுக்குத் தனது நிலைப்பாட்டை விளக்குவதற்கான முயற்சியாகவே விசிக இதை முன்னெடுப்பதாகக் கருதுகிறேன்" என்றார் அவர்.

பாமகவும் தவெக கூட்டணியில் சேரும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்தக் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

பாமக தவெக கூட்டணிக்கு நெருங்குகின்றனவா? விசிக ஏன் வெளியேறுவோம் என்கிறது?

விசிக ஏன் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தவெக கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தங்களுடைய நிலைப்பாட்டைத் தொண்டர்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கூறுகிறார்.

"எனக்குத் தெரிந்தவரை தவெக-வுக்கும் பாமக-வுக்கும் இடையே அத்தகைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், தவெக கூட்டணியில் பாமக இணையப் போவதாக ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. எங்கள் தொண்டர்களும் இதுதொடர்பாக எங்கள் பதிலுக்காகக் காத்திருந்தனர். எனவே, பாமகவும் பாஜகவும் இடம்பெறும் எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்பதைத் தொண்டர்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் விளக்க வேண்டியுள்ளது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதாவது, தவெக - பாமக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக விசிக கூறவில்லை. மாறாக, அத்தகைய கூட்டணி உருவாகக்கூடும் என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், தங்கள் நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டிய அரசியல் தேவை இருப்பதாக விசிக கூறுகிறது.

திண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திருமாவளவனும் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தினார். பாமக இடம்பெறும் எந்த அணியிலும் விசிக இடம்பெறாது என்று அவர் தெரிவித்தார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன்
படக்குறிப்பு, கோப்புப் படம்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக அறிவித்திருந்தபோதும், அக்கட்சியின் வாக்குகள் தவெக-வுக்கு சென்றதாகப் பேசப்படுவதை அவர் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பினார்.

"மதுராந்தகத்தில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக சொல்லிவிட்டது. ஆனால், பேசுகிற அத்தனை பேரும் பாமகவின் வாக்குகள் தவெக-வுக்கு விழுந்ததாகச் சொல்கிறார்கள். எப்படி இது நிகழும்?" என்று அவர் கேட்டார். மேலும், வாக்குச்சாவடி வாரியாக வாக்குகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டதா என்றும், வன்னியர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை வைத்து இந்த முடிவுக்கு வந்தது யார் என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

தாம் பாமகவை எதிர்ப்பதை அந்தக் கட்சி வன்னியர் சமூகத்தினரிடையே எடுத்துச் சென்று, அவர்களைத் தங்கள் பின்னால் அணிதிரட்டப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறினார். "திருமாவளவன் இப்படி சொல்றான் பாருய்யா" என்று கூறி, வன்னியர்கள் ஏன் தங்களுக்குள் சிதறிக் கிடக்க வேண்டும், ஏன் திமுக அல்லது அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை பாமக முன்னெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அதோடு, பாஜகவும் பாமகவும் ஒரே மாதிரியான தேர்தல் உத்திகளைக் கையாண்டதாகவும் அவர் விமர்சித்தார். "சாதியவாத, மதவாத சமூகப் பொறியியலை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். எனவே, பாமக இடம்பெறும் அணியில் எந்தக் காலத்திலும் இருக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்" என்றும் கூறினார்.

அமைச்சர் வன்னி அரசு
படக்குறிப்பு, அமைச்சர் வன்னி அரசு (கோப்புப் படம்)

விசிக வெளியேறினால் தவெக-வுக்கு என்ன பாதிப்பு?

விசிகவின் நிலைப்பாடு தவெக-வுக்கு அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கருதுகிறார். அவரது கூற்றுப்படி, "தற்போதைக்கு விஜய் தனது கூட்டணிக்குள் பாமக வருவதை விரும்பவில்லை. தற்போதைய கூட்டணி தொடர வேண்டும் என்றும், விசிக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்."

குறிப்பாக, "விசிக வெளியேறினால், அது மற்ற கூட்டணிக் கட்சிகளையும் பாதிக்கக்கூடுமென அவர் அஞ்சுகிறார். விசிக வெளியேறினால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தவெக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடக்கூடும் என்று விஜய் கருதுகிறார். எனவே, விசிகவுடன் அவர் கவனமாக நடந்துகொள்கிறார். அந்தக் கட்சியைப் புண்படுத்த அவர் விரும்பவில்லை" என்று ரவீந்திரன் துரைசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்தக் கருத்தின்படி, பாமகவை சேர்ப்பது குறித்த விவாதம் ஒரு கட்சியின் வருகையைப் பற்றியது மட்டுமல்ல, தவெக ஏற்கெனவே அமைத்துள்ள கூட்டணியை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பதும் இதில் முக்கியமானது.

பாமக கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு அப்பால், விசிகவின் எதிர்ப்பை மீறி அத்தகைய முடிவை எடுத்தால் மற்ற கூட்டணிக் கட்சிகளிடையே என்ன எதிர்வினை ஏற்படும் என்பதையும் தவெக கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும்.

'அமைச்சர் பதவியைவிட இயக்கம்தான் முக்கியம்' - வன்னி அரசு

பாமக தவெக கூட்டணியில் இடம்பெற்றால் விசிக என்ன செய்யும் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதாக சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு திண்டிவனத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அப்போது, "கடந்த பத்தாண்டு காலமாக அதற்குப் பதில் சொல்லிச் சொல்லி வாயும் வலித்துவிட்டது, கேட்டுக் கேட்டுக் காதும் வலிக்கிறது" எனக் கூறிய வன்னி அரசு, பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்பதே தங்களின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்றும், கொள்கையைவிட அமைச்சர் பதவி தங்களுக்கு முக்கியமல்ல என்றார்.

குறிப்பாக, "இந்தப் பதவி இருக்கும் அல்லது இல்லாமல் போகும், எனக்கு அமைச்சரைவிட எழுச்சித் தமிழர்தான் முக்கியம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முக்கியம். நம் போராட்டம்தான் முக்கியம்" என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் (கோப்புப் படம் )
படக்குறிப்பு, அமைச்சர் ராஜ்மோகன் (கோப்புப் படம் )

தங்கள் தலைவர் திருமாவளவன் என்ன கட்டளையிட்டாரோ, அந்தப் பணியைச் செய்யும் அடிமட்டத் தொண்டராகவே தாம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல, பதவிக்காக திருமாவளவன் பேசுகிறார் என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த வன்னி அரசு, விசிக தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கம் மட்டுமல்ல என்றும், தேர்தல் புறக்கணிப்புப் பாதையில் இருந்த இயக்கம் என்றும் கூறினார்.

"விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் அதிமுக, திமுக போன்ற சராசரிக் கட்சி அல்ல. இதுவொரு விடுதலை இயக்கம்" என்று அவர் தெரிவித்தார். தேர்தல் அரசியலைவிட சாதி ஒழிப்பும் மக்களின் விடுதலையும் தங்கள் இயக்கத்தின் அடிப்படை நோக்கங்கள் என்றும், சாதிய ஒடுக்குமுறையில் இருந்தும் சனாதனத்தில் இருந்தும் விடுதலை பெறுவதே தங்களின் இலக்கு என்றும் வன்னி அரசு கூறினார்.

தவெக - விசிக உறவு: கூட்டணி வலுவாக உள்ளதா?

விசிகவின் எதிர்ப்பையும் பாமக குறித்த விவாதத்தையும் தொடர்ந்து, தவெக தரப்பில் கூட்டணி உறவு குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி குறித்து எந்த ஊகத்துக்கும் இடமில்லை என்றும், கூட்டணி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

"எங்கள் சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விசிக ஒரு தூண். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி குறித்து ஊகங்களுக்கு இடமில்லை. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், திருமாவளவன் எங்கள் மூத்த சகோதரர். எங்கள் தலைவர் விஜயும் திருமாவளவனும் ஒன்றிணைவது கொள்கை அடிப்படையிலான, இயல்பான கூட்டணி" என்று அவர் கூறினார்.

இதன் மூலம் விசிகவுடனான உறவை தவெக முக்கியமானதாகக் கருதுவதாக அக்கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

பாமகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் குமார்
படக்குறிப்பு, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் குமார்

பாமகவின் பதில் என்ன?

தவெக கூட்டணியில் இணைவதற்கு பாமக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் குமார் தெரிவித்தார். அதுகுறித்து அவர் பேசியபோது, "பாமக-வுக்கு தவெக கூட்டணியில் சேரும் எண்ணம் இல்லை என்பதை எங்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணியும் தெளிவுபடுத்தியுள்ளனர். நாங்கள் இன்னமும் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம்" என்று அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

விசிக தலித் வாக்குகளைப் பெறுவதற்காக பாமகவையும் வன்னியர் சமூகத்தினரையும் எதிர்த்துப் பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். திருமாவளவன் பாமகவை சாதியவாதக் கட்சியாகச் சித்தரித்ததாகவும் கூறினார். திருமாவளவன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தாலும், "அவர் முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானது பாஜகவின் ஆதரவுடன்தான் என்றும் கணேஷ் குமார் தெரிவித்தார்.

மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு வாக்கு வங்கி இருந்ததாகக் கூறிய அவர், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது பாமக 16,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் குறிப்பிட்டார். அப்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்த விசிக சுமார் 11,000 வாக்குகளையே பெற்றதாகவும் அவர் கூறினார். மேலும், இடைத்தேர்தல்களில் பாமகவின் வாக்குகள் தவெக-வுக்கு மாற்றப்பட்டதாகத் தங்கள் கட்சி ஒருபோதும் கூறவில்லை என்றும் கணேஷ் குமார் தெரிவித்தார்.

பாமக தவெக கூட்டணிக்கு நெருங்குகின்றனவா? விசிக ஏன் வெளியேறுவோம் என்கிறது?

2011க்கு பிறகு தொடரும் அரசியல் இடைவெளி

விசிக - பாமக இடையிலான மோதல் தற்போதைய தவெக கூட்டணி விவகாரத்துடன் தொடங்கியதல்ல. இரு கட்சிகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். விசிகவும் பாமகவும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 30 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றது. விசிக போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறவில்லை.

கடந்த 2012இல் தருமபுரியில் தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்ட சம்பவம், தலித் - வன்னியர் சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாமகவின் அரசியலை விசிக கடுமையாக விமர்சித்தது. திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இடம்பெற்றிருந்த காலத்திலும் பாமகவை சேர்ப்பது தொடர்பாக விசிக தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதாவது, பாமக இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோமென்ற நிலைப்பாடு தற்போதைய தவெக கூட்டணிக்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல.

இப்போது தவெக கூட்டணியிலும் அதே நிலைப்பாட்டை விசிக வலியுறுத்துகிறது. பாமக கூட்டணியில் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்று தவெகவும் பாமகவும் கூறினாலும், அத்தகைய வாய்ப்பு உருவாகும் என்ற அரசியல் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விசிக விரும்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு