காணொளி: நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து துப்பாக்கிச் சூடு; என்ன நடந்தது?
மும்பையின் ஜூஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை டைகர் ஷ்ராஃப்பின் காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தச் சம்பவத்தில் நடிகர் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால், அவரது கார் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் காயமடைந்தனர். தற்போது சம்பவம் தொடர்பாக, சிறார் உட்பட மூன்று பேரை கோட்டா நகர காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மாலை 7 மணியளவில், டைகர் ஷெராஃப் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. அவர் மீது குண்டு பாயவில்லை, அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக மும்பை காவல் துணை ஆணையர் மோஹித் கார்க் கூறுனார்.
இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனினும், அந்தப் பதிவின் உண்மைத்தன்மையை காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என பிடிஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது.
மறுபுறம் இந்தச் சம்பவம் தொடர்பாக, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, டைகர் ஷெராஃப்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, இதற்குப் பின்னால் இருக்கும் குற்ற வலையமைப்புகளை அழிக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ராகேஷ் குமார் இது பற்றி பேசியுள்ளார்
நாங்கள் மாலை 7:00 மணிக்கு வண்டியை வெளியே எடுக்க வந்தோம்.
பிறகு அவர்கள் வெளியே வந்தனர். வெளியே வந்ததும் மூன்று நபர்கள் இருந்தனர்; ஒருவர் பைக்கில் இருந்தார், மற்ற இருவரும் வெளியே நின்றுகொண்டிருந்தனர். ஒருவர் வாயிலுக்கு அருகிலும், மற்றொருவர் வாயிலுக்கு சற்று முன்பகுதியிலும் நின்றிருந்தனர்.
டைகர் ஷெராஃப் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி முன்பக்கத்திலிருந்து ஒருவர் சுட்டார். அவர் மீதும் ஒரு குண்டு பாய்ந்தது, அதனால் அவர் கீழே சாய்ந்துவிட்டார்.
வாயிலின் அருகில் நின்றுகொண்டு சுட்ட மற்றொருவரால் டிரைவரின் கையில் குண்டு பாய்ந்தது.
பிபிசி நியூஸ் மராத்தியின் தகவல்படி, மும்பை ஜூஹு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மும்பை மேற்கு மண்டலம் 2-ன் காவல் துணை ஆணையர் மோஹித் கார்க், டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



