கில் - சாய் சுதர்ஷன் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு நுழைந்த குஜராத்

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 29) எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும்.
இந்த குவாலிஃபயர் 2 போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். முன்னதாக நடந்த இரண்டு பிளே ஆஃப் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 240+ ஸ்கோர்கள் எடுத்து வெற்றியும் பெற்றிருப்பதால், ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார்.
அந்த இலக்கை 18.4 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றியை உறுதி செய்தது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்ஷன் 58 ரன்களும் எடுத்தனர்.
சரிவிலிருந்து மீட்ட சூர்யவன்ஷி & ஜடேஜா

பட மூலாதாரம், ANI
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தினார் மொஹம்மது சிராஜ். 1 ரன் அடித்திருந்த ஜெய்ஸ்வால், தன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த துருவ் ஜுரெல், இரண்டாவது ஓவரில் அவுட் ஆனார். 7 ரன்கள் அடித்திருந்த அவரது விக்கெட்டை வீழ்த்தினார் ககிஸோ ரபாடா.
9/2 என்று தடுமாறிய நிலையில் யாரும் எதிர்பாராத விதம் ரவீந்திர ஜடேஜாவை நான்காவது வீரராகக் களமிறக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். அது அந்த அணிக்கு நல்ல முடிவைக் கொடுத்தது. ஜடேஜா - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி ராயல்ஸை சரிவிலிருந்து மீட்டதோடு, நல்ல நிலைக்கும் எடுத்துச் செல்லத் தொடங்கியது.
சிராஜ் வீசிய 3வது ஓவரிலிருந்து தன் வழக்கமான அதிரடியைத் தொடங்கினார் சூர்யவன்ஷி. அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த அவர், ரபாடா வீசிய 4வது ஓவரில் தலா 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் விளாசினார். அதன்பிறகு ஜடேஜாவும் அதிரடியில் இறங்க, பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது ராயல்ஸ்.
பவர்பிளே முடிந்த அடுத்த இரு ஓவர்களில் ரன் விகிதம் சற்று குறைந்தது. அந்த இரு ஓவர்களிலும் தலா 6 ரன்களே எடுக்கப்பட்டன. மொத்தமே ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது. மேலும், 8வது ஓவரின் முடிவில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்திலிருந்து வெளியேறினார் ஜடேஜா. அவர் வெளியேறியபோது ராயல்ஸ் ஸ்கோர் 8 ஓவர்களில் 82/2.
நிலைத்து நின்று ஆடிய சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI
ஜடேஜாவுக்குப் பதில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக், வந்துவுடனேயே அதிரடி காட்டினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே ரஷித் கான் வீசிய சற்றே ஷார்ட் லென்த் பந்தை பவுண்டரியாக்கினார் பராக். அதற்கடுத்த பந்தில் சிக்ஸரும் விளாசினார். மூன்றாவது பந்தில் அவர் சிங்கிள், எடுக்க, நான்காவது பந்தில் சூர்யவன்ஷி சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.
ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் ரியான் பராக் கேட்சாகி வெளியேறினார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய தஷுன் ஷனகா ரன்கள் சேர்க்கத் தடுமாறினார். 9 பந்துகள் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்த அவரை ஹோல்டர் வெளியேற்றினார். 13வது ஓவரில் ஆர்ச்சர் (9 ரன்கள்) விக்கெட்டைக் கைப்பற்றினார் பிரசித் கிருஷ்ணா. 13 ஓவர்கள் முடிவில் 120/5 என்ற நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நிலைத்து நின்று ஆடியிருந்த சூர்யவன்ஷி 31 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 6வது 50+ ஸ்கோர் இது. அதேசமயம் ஐபிஎல் அரங்கில் அவர் அடிக்கும் மெதுவான அரைசதம் இதுதான்.
ஆனால், அடுத்த ஓவரிலிருந்து தன் ஆட்டத்தை மாற்றினார் அந்த 15 வயது பேட்டர். காயத்தால் வெளியேறியிருந்த ஜடேஜா மீண்டும் களமிறங்கி நிதானமாக ஆட, சூர்யவன்ஷி தன் வேகத்தைக் கூட்டினார். ரபாடா வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், சிராஜ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலும் சிக்ஸர் அடித்தார். ஹோல்டர் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த அவர், அந்த ஓவரில் மேலும் 1 சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 17வது ஓவரிலோ 2 சிக்ஸர்கள் விளாசினார்.
மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சூர்யவன்ஷி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் 96 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் களமிறங்கிய டானவன் ஃபெரீரா, ரஷித் கான் வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசினார். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. ஃபெரீரா 11 பந்துகளில் 38 ரன்களும், ஜடேஜா 35 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டைட்டன்ஸ் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
குஜராத்துக்கு கிடைத்த நல்ல தொடக்கம்
பெரிய இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் கூட்டணி. ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே இவர்கள் இருவரும் தலா இரண்டு பவுண்டரிகள் அடிக்க, அந்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டன.
அவர்கள் இருவரும் வழக்கம்போல் இடைவெளிகளைக் கண்டுபிடித்து பவுண்டரிகளாக அடித்தார்கள். அதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
2வது ஓவரில் 12 ரன்கள், 3வது ஓவரில் 10 ரன்கள், 4வது ஓவரில் 11 ரன்கள், 5வது ஓவரில் 7 ரன்கள், 6வது ஓவரில் 11 ரன்கள்... இப்படி சீராக அவர்கள் ரன் சேர்க்க, பவர்பிளேவில் விக்கெட் இழக்காமல் 69 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.
பவர்பிளே முடிந்த பிறகு ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்த ராஜஸ்தானின் திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. அதே விகிதத்தில் கில் - சாய் சுதர்ஷன் ஜோடி ரன் சேர்த்துக்கொண்டே இருந்தது.
துஷார் தேஷ்பாண்டே வீசிய 9வது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்து தன் அரைசதத்தை நிறைவு செய்தார் ஷுப்மன் கில். 30 பந்துகளில் அவர் தன் அரைசதத்தைக் கடந்தார். 8.4 ஓவர்களில் இந்தக் கூட்டணியும் 100 ரன்களைக் கடந்தது.
தேஷ்பாண்டே வீசிய 9வது ஓவரில் தான் அந்த அணி தங்கள் முதல் சீக்ஸரை அடித்தது. ஆனால், அதன்பின் அடுத்தடுத்து சில ஓவர்களுக்கு சிக்ஸர்களாக விளாசியது அந்த அணி. ஜடேஜா வீசிய 10வது ஓவரில் 1 பவுண்டரியும், 2 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன. அதனால் 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 127 ரன்கள் குவித்தது டைட்டன்ஸ்.
11வது ஓவரின் முதல் பந்தில் சாய் சுதர்ஷன் தன்னுடைய முதல் சிக்ஸரை அடித்தார். அதோடு தன்னுடைய அரைசதத்தையும் அவர் நிறைவு செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்டது 26 பந்துகள்.
டைட்டன்ஸ் அணியின் அதிரடி தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், குவாலிஃபயர் 1 போலவே இந்தப் போட்டியிலும் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார் சாய் சுதர்ஷன். அவர் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தக் கூட்டணி முதல் ஓவருக்கு 12.5 ஓவர்களில் 167 ரன்கள் குவித்தது.

பட மூலாதாரம், ANI
இறுதிப் போட்டியில் குஜராத்
சாய் சுதர்ஷன் அவுட்டான அடுத்த ஓவரில், ஜடேஜா பந்தில் பவுண்டரி அடித்து தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார் ஷுப்மன் கில். 47 பந்துகளிலேயே தன் சதத்தை அவர் நிறைவு செய்தார்.
53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த அவர் ஆர்ச்சர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அவர் அவுட்டாகும்போது குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற கடைசி 30 பந்துகளில் 33 ரன்களே தேவைப்பட்டது. தன் அணியை அப்படியொரு நல்ல நிலைக்கு எடுத்துவந்துவிட்டு வெளியேறினார் கில்.
அடுத்து வந்த ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாதியா ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். இறுதியில் 18.4 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது குஜராத் டைட்டன்ஸ்
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மே 31 ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் அந்த அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடுகிறது.
பிளேயிங் லெவனில் யார்?
ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்தப் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டானவன் ஃபெரீரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா, யஷ் ராஜ் புஞ்சா.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஷுபம் துபே, சுஷாந்த் மிஷ்ரா, அமன் ராவ், ரவி பிஷ்னாய், துஷார் தேஷ்பாண்டே.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. குல்வந்த் கெஜ்ரோலியாவுக்குப் பதிலாக சாய் கிஷோர் சேர்க்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், சாய் கிஷோர், ககிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, மொஹம்மது சிராஜ்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ராகுல் திவேதியா, கிளென் ஃபிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, அர்ஷத் கான்.































